📅 Tuesday, 03 November 2026 📍 Detecting location… ⛅ --°C
முக்கிய செய்திகள்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 87 ரிசார்ட்டுகளை மூட ஐகோர்ட் உத்தரவு

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 87 ரிசார்ட்டுகளை மூட ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 87 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்கள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார, ஜி.கே.முத்துகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் 87 ரிசார்ட்டுகள் உள்ளன. அவற்றில் எந்த ரிசார்ட்டும் உரிய அனுமதிகளைப் பெறாமல் செயல்பட்டு வருகின்றன. குடியிருப்புகளை வணிக நடவடிக்கைக்காக பயன்படுத்த மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெற்றதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோதமாக செயல்படும் 87 ரிசார்ட்டுகளையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்தக்கட்டமாக இந்த கட்டுமானங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ஏற்கெனவே மூடப்பட்ட சில ரிசார்ட்டுகள் பின்வாசல் வழியாக செயல்பட்டு வருவதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

உரிய உரிமங்களும், அனுமதிகளும் இல்லாமல் செயல்படும் இந்த ரிசார்ட்டுகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 27-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

Comments

No comments yet. Be the first to write.