முதல்வர் தலைமையில் மாநில வனவிலங்கு வாரியம்: தலைவர் உள்ளிட்ட 32 பிரதிநிதிகள் நியமனம்
சென்னை: முதல்வர் விஜய்யை தலைவராகக் கொண்டு, மாநில வனவிலங்கு வாரியத்துக்கு 32 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன்படி மாநில வன விலங்கு வாரியம் அமைக்கப்படுகிறது.
இந்த வாரியம், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காடுகள் மேலாண்மை தொடர்பாக மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
இவ்வாரியம், மாநிலத்தில் தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களாக அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றின் மேலாண்மை குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
வனவிலங்குகள் மற்றும் குறிப்பிட்ட தாவர வகைகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை வகுப்பதில் அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும். இந்த வாரியத்தின் தலைவராக அம்மாநில முதல்வர் இருப்பார்.
திய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு மாநில வன உயிரின வாரியத்தை முழுமையாக மறுசீரமைத்து தமிழக மாநில வனவிலங்கு வாரியத்தின் தலைவராக முதல்வர் விஜய், துணைத் தலைவராக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை தரப்பு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் எம்.சுதாகர் (காட்பாடி), எஸ்.கார்த்திகேயன் (மதுரை கிழக்கு), எம்.ஆர்.பல்லவி (திரு.வி.க. நகர்) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வனவிலங்கு மற்றும் இயற்கைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு சாரா அமைப்புகள் தரப்பு உறுப்பினர்களாக, நொய்டாவைச் சேர்ந்த இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் ஜோஸ் லூயிஸ், மைசூரைச் சேர்ந்த இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் மூத்த விஞ்ஞானி டி.ஆர்.சங்கர ராமன், தஞ்சாவூரைச் சேர்ந்த ஓம்கார் அறக்கட்டளையின் பாலாஜி வேதராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்பு, உயிரியல், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் 10 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசாணையில் இடம்பெற்றுள்ளது.
Comments
No comments yet. Be the first to write.