📅 Tuesday, 03 November 2026 📍 Detecting location… ⛅ --°C
தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் தோல்வி.. 3வது நாளில் 60 கடைகள் மட்டுமே மூடல்.. சஸ்பெண்ட் பயமா?

டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் தோல்வி.. 3வது நாளில் 60 கடைகள் மட்டுமே மூடல்.. சஸ்பெண்ட் பயமா?
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் 3-வது நாளில் முற்றிலும் பிசுபிசுத்துப் போய் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இன்று மதியம் 3 மணி நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள மொத்தம் 4,051 டாஸ்மாக் கடைகளில் 3,991 கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கின. வெறும் 60 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 9 கடைகளும், கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 4 கடைகளும் மூடப்பட்டிருந்தன. அதேவேளையில் கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 100% கடைகளும் முழுமையாக திறக்கப்பட்டிருந்தன. சென்னை நகரில் உள்ள 61 கடைகளில் 60 கடைகள் திறக்கப்பட்டு, ஒரே ஒரு கடை மட்டுமே மூடப்பட்டிருந்தது.
காலி பாட்டில்களை பெற்றுக்கொள்வதில் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக கூறி ஊழியர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டனர். முதல் நாளில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அரசின் சுற்றறிக்கை மற்றும் பேச்சுவார்த்தைக்கு பின் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

தினசரி ரூ.140 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டும் டாஸ்மாக் அமைப்பிற்கு, 98.5% கடைகள் திறக்கப்பட்டதால் வழக்கமான வருவாயில் பெரிய பாதிப்போ அல்லது அரசுக்கு பெரும் நிதி இழப்போ ஏற்படவில்லை. இதன் மூலம் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செயல்படும் என்பது தெளிவாகியுள்ளது.

Comments

No comments yet. Be the first to write.