தமிழகம் முழுவதும் அரசு மாதிரி பள்ளிகளின் பெயர்கள் அதிரடி மாற்றம்.! இனி வெற்றி பள்ளிகள் என்றே அழைக்கப்படும். அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வரும் ‘அரசு மாதிரிப் பள்ளிகள்’ இனி ‘வெற்றி பள்ளிகள்’ என்று அழைக்கப்படும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்குச் சிறந்த உறைவிடம், தரமான உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், விளையாட்டு மற்றும் நுண்கலை பயிற்சிகளை ஒரே வளாகத்தில் வழங்கும் இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகளால், இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களின் பெயர்களை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில், அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயரை ‘வெற்றி பள்ளிகள்’ என பெயர் மாற்றம் செய்து, மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் ஆர். சுதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல, மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் ‘திறன் தமிழ்நாடு’ என மாற்றப்பட்டுள்ளதுடன், அத்திட்டத்தின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த முந்தைய அரசியல் சார்ந்த பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டமான ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயர், ‘வெற்றிப் பயணம்’ என மாற்றம் செய்யப்பட்டு இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தைப் பேணவும் பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, கல்விக்கண் திறந்த பெருந்தலைவரைப் பெருமைப்படுத்தும் விதமாகப் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மறுபெயரிடப்பட்டுள்ளது.
பெயர் மாற்றத்தோடு மட்டுமன்றி, இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இக்காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் இந்தத் தொடர் பெயர் மாற்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.
Comments
No comments yet. Be the first to write.